Sunday, October 25, 2020

 

 மனு நீதி....

பன்னெடுங்காலமாய்
பல்வேறு நூல்கள்

நிரம்பியிருந்தன இங்கே ...

 

தாடிக்கார கிழவன் வந்தான் 

கொஞ்சகாலம் பொறுப்பிலிருந்தான்

பரண்மீதேறி

தேடிப்படித்து

தேவையற்றவை என

புறம் தள்ளினான்

பலவற்றை .....

 

நல்லவற்றை மட்டும் படித்த

நாங்கள் உருவனோம்

ஒரு புதிய தலைமுறை..

 

புதிதாக ஒருவன்

பொறுப்புக்கு வந்தான்.

வண்ணத்திலும் ,

வர்ணத்திலும் வேறுபட்டான்

எங்களிலிருந்து..

வெறுத்து ஒதுக்கினோம்

சிலகாலம்....

 

இன்று ஒருத்தி வந்தாள்

எங்களவள்தான்..

உடன் பிறந்தாள்தான்..

கிழவனின் பேத்தி

எனச் சொல்லிக் கொண்டாள்.. 

 

ஈன்ற பரம்பரைக்கு

துரோகம் செய்தாள்..

ஈனப்பிறவியோ??

 

கோழையை பெற்றவள்

முலை அறுத்த மண் இது 

பாவி அவள் இதை மறந்தாள். 

 

முரசரைந்தான் தம்பி

மடமையை கொளுத்த..

அணி திரள்வோம்

அவன் பின்னால்..

பெண்மையை போற்றுவோம்.

வாழ்த்துக்கள் ..

Monday, July 27, 2020

பொய் வண்ணம்..27... ஆண்டி


ஆண்டி நான் அரசியல் பிழைக்கப்போய்
வாரியத்தலைவர் ஆனேன்..
ஆளுயர மாலைகள்
அலங்கார வளைவுகள்
ஊர் திரண்டு ஊர்வலம்
மாலைகளில் சுகங்களில்
நனைந்து போக மறுத்தது
ஏழை மனது..
வியர்வையை நுகர
ஏங்கியது நாசி ..

வட்டத் தலைவர் வந்தார் வாழ்த்தியபடியே
மனுவை நீட்டினார் -கூடவே மனத்தையும்
 வாங்க மறுத்த கரத்தை பிடித்து இழுத்து
மனுவைத் திணித்து-மடியினயும் திறந்தார்..

வியாபாரி வந்தார் -விழுந்தார்
நெடுஞ்சாண்கிடையாக.
தலை அறுக்கப்பட்ட தமிழ் துரோகி போல
நான்கு சுவர்களுக்குள்
தன்மானத்தை இழந்து..

அக்கம்பக்கத்தினர் வந்தனர்
ஆளுக்கு ஒரு கோரிக்கை
நல்ல காலம்வந்தது என்றனர்
பூட்டிய கதவுக்குள் மனதை திறந்தனர்

அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டு
 மனைவி மக்களை சுகப்படுத்தி
வாசலுக்கு வந்தேன்..
பூக்காரக் கிழவி..

இரண்டு முறுக்குடனும்
ஒரு கூடை அன்புடனும்

விழுந்து வணங்கினேன்
எதிர்பார்ப்பும் இல்லை
எனக்கு..
ஏமாற்றம் இல்லை
அவளுக்கு.
மாலைகள் தரா மகிழ்ச்சியை
அவள் பொக்கைவாய் நுனி
வெற்றிலை எச்சில் தந்ததால்..

பொய் வண்ணம்...26... சுதந்திரதின பொய்..

அப்பா
நீ சொன்ன பொய்
ஆயிரம் மடங்கு தேவலாம்.
ஒவ்வொரு லீவுக்கும் 2 சினிமா
ஆரியபவன் டிபன், ஐஸ்கிரீம்
ஆட்டோவில் வீடு- என்று
சொல்லிவிட்டு
வருடம் ஒருமுறையேனும்
அழைத்துச் செல்வாய்..

வருடாவருடம்
விலைவாசி குறையும்
ஊழல் ஒழிக்கப்படும்
கல்வித்தரம் உயரும் என்று
நம் பிரதமர்கள் சொன்ன
பொய்யை விடவும்,
உன் பொய் ஆயிரம் மடங்கு
தேவலாம் அப்பா..

பொய் வண்ணம்...25.. காத்திருப்பு....

அவர்கள் காத்திருக்கிறார்கள் நமக்காக
நாம் என்ன செய்யப்போகிறோம்?
கருப்பு இருட்டை கிழித்துக் கொண்டு
மானுடத்தை தட்டியெழுப்ப
சூரியக்கதிர்களாய்.

அறியாமை மயக்கத்தில் கிடக்கும்
உடலையும் உணர்வையும்
ஒலியெழுப்பி,நம்மை எழுப்ப
சேவல்களாய்..

முடை நாற்றமெடுக்கும்
மூட நம்பிக்கைகளால்
உணர்வு இழந்த நாசிகளுக்கு
புத்துணர்வு ஊட்ட
காலை மகரந்தங்களாய்..

பழமை வாதங்களைக் கேட்டு கேட்டு
செவிடாகி போன காதுகளுக்குள்
புதுராகம் பாட
சோலைக்குயில்களாய்..

இத்தனைக்கும் கேளாத காதாய்
பேசாத வாயாய்
இமைக்காத விழியாய் இருக்கிற
ஜனங்களை தட்டி எழுப்ப
கோவில் மணியாய்
தேவாரமாய்
அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்காக..

நாம் என்ன
செய்யப்போகிறோம்
அவர்களுக்காக??

பொய் வண்ணம்...24...நான்..

வல்லூறுகளுடன் வட்டமிட
நினைப்பவன் நான்..
வான்கோழிகள் நட்பு
தேவை இல்லை எனக்கு..

நெடிதுயர்ந்து மேகத்தை
பிளப்பவன் நான்
ஈரத் தரை பாசியின்
தோழமை எனக்கெதற்கு?

அகண்ட பிரபஞ்சத்தை
வளைத்து பிடிப்பேன் என் விரல்களால்.
கரையோரத்து நாணல் அல்ல நான்.
கூண்டுக்கிளி என்றா நினைத்தீர்கள் ?
நான் பறந்து திரியும் வானம்பாடி
சின்ன சிறைக்குள்ளே அடைத்து
வேடிக்கை பார்க்க நினைக்காதீர்
என்னை.

நான் காற்று
எங்கும் எப்படியும் புகுந்து
வியாபித்திருப்பேன்
நான் தென்றல்
என்னை தீண்டாத வரை ...
புறப்பட்டால் புயல்
அந்தி மாலை சூரிய ரேகையும் நானே
ஆலமர கிளையும் நானே
நானே நான்
நான் தான்
நான்...

பொய் வண்ணம்...23... ஏழையின் விண்ணப்பம்..

என்ன கேட்கலாம்
இப்புத்தாண்டில் அவனிடம்?
முட மூட குறைப்பிரசவங்களை
ப்ரசிவிப்பதை விட்டு
இரட்டை நாக்கு,
இரும்பு இதய ஆடைகள் இல்லாத
முழு நிர்வாணங்களை மட்டுமே
படைக்கும் படி கேட்கலாமா?

கருவை சுமக்கும் கன்னியையும்
அந்த கன்னி சுமக்கும் கருவையும்
கலைத்துவிட கேட்போமா- இல்லை
அந்த காமுகனை கழுவிலேற்றி
கொன்றுவிட கேட்போமா?

வாழ்க்கைக்கு உதவாத
வாதங்கள் புரிபவன் வாயை
கட்டி விட கேட்போமா இல்லை
அவன் மூளி எழுத்துக்களை
முடமாக்கி விட
கோரிக்கை விடலாமா ?

ஒருவேளை சோறிட இயலாத
கல்வியை மறுப்போமா?
இல்லை அதை போதிப்பவனுக்கே
வாழ்க்கை கல்வியை
கொஞ்சம் நாமே சொல்லலாமா?

வரதட்சணை தீயை வளர்ப்பவனை
வதம் செய்யச் சொல்லலாமா ?
இல்லை அவனை மணக்க
நாமே இனிமேல் தட்சணை கேட்கலாமா?

அரிசன சகோதரன் நுழையா கோவிலை
தகர்க்கத் சொல்லலாமா?
இல்லை தரிசனம் மறுக்கும்
ஆண்டவனையே
கொஞ்சம் தள்ளி விடலாமா?

இக்கொடுமைகள் இல்லா
புதிய சமுதாயத்தை படைக்க
சொல்லலாமா?
இல்லையேல் படைப்பதயே
கொஞ்சம்
நிறுத்த சொல்லலாமா

பொய் வண்ணம்..22.... புதிய பாடத்திட்டம்......


நானும் கேட்டுக் கேட்டு சலித்து விட்டேன் தோழா
அவன் ஒன்றும் வழிகாட்டுவதாக காணோம்
இம்முறை நாமே ஒரு முடிவு செய்யலாமா?

நல்வழி காட்டுகிற பாதையையை மட்டும் விட்டுவிட்டு
மற்றவற்றை தகர்த்து விடலாமா ?

சத்தியம் பேசுகிற நாவை மட்டும்  பேச விட்டு
மற்றவற்றை அறுத்துவிடலாமா?

கொடுக்கிற கையை கொடுக்கச் சொல்லி
எடுக்குற கையை என்ன செய்யலாம்?
பொசுக்கலாம்.
வேறு என்னதான் செய்யலாம்?

ஆனாலும்
ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டுமே
இந்த தேசம் உருப்பட
வருங்கால சந்ததி வாய்மூடி
மௌனியாக இருக்க வேண்டி
ஏற்றத்தாழ்வுகளை ஏடுகளில் நுழைத்து
மகாத்மா எந்த மதத்தை சேர்ந்தவர்
பாரதி எந்த சாதி என்ற கேள்வி பதில்
நம் சந்ததியின் பாடப்புத்தகத்தில் வருமுன்
ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டுமே..
இந்த தேசம் உருப்பட..
என்ன செய்யலாம்??