Monday, July 27, 2020

பொய் வண்ணம்..27... ஆண்டி


ஆண்டி நான் அரசியல் பிழைக்கப்போய்
வாரியத்தலைவர் ஆனேன்..
ஆளுயர மாலைகள்
அலங்கார வளைவுகள்
ஊர் திரண்டு ஊர்வலம்
மாலைகளில் சுகங்களில்
நனைந்து போக மறுத்தது
ஏழை மனது..
வியர்வையை நுகர
ஏங்கியது நாசி ..

வட்டத் தலைவர் வந்தார் வாழ்த்தியபடியே
மனுவை நீட்டினார் -கூடவே மனத்தையும்
 வாங்க மறுத்த கரத்தை பிடித்து இழுத்து
மனுவைத் திணித்து-மடியினயும் திறந்தார்..

வியாபாரி வந்தார் -விழுந்தார்
நெடுஞ்சாண்கிடையாக.
தலை அறுக்கப்பட்ட தமிழ் துரோகி போல
நான்கு சுவர்களுக்குள்
தன்மானத்தை இழந்து..

அக்கம்பக்கத்தினர் வந்தனர்
ஆளுக்கு ஒரு கோரிக்கை
நல்ல காலம்வந்தது என்றனர்
பூட்டிய கதவுக்குள் மனதை திறந்தனர்

அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டு
 மனைவி மக்களை சுகப்படுத்தி
வாசலுக்கு வந்தேன்..
பூக்காரக் கிழவி..

இரண்டு முறுக்குடனும்
ஒரு கூடை அன்புடனும்

விழுந்து வணங்கினேன்
எதிர்பார்ப்பும் இல்லை
எனக்கு..
ஏமாற்றம் இல்லை
அவளுக்கு.
மாலைகள் தரா மகிழ்ச்சியை
அவள் பொக்கைவாய் நுனி
வெற்றிலை எச்சில் தந்ததால்..

பொய் வண்ணம்...26... சுதந்திரதின பொய்..

அப்பா
நீ சொன்ன பொய்
ஆயிரம் மடங்கு தேவலாம்.
ஒவ்வொரு லீவுக்கும் 2 சினிமா
ஆரியபவன் டிபன், ஐஸ்கிரீம்
ஆட்டோவில் வீடு- என்று
சொல்லிவிட்டு
வருடம் ஒருமுறையேனும்
அழைத்துச் செல்வாய்..

வருடாவருடம்
விலைவாசி குறையும்
ஊழல் ஒழிக்கப்படும்
கல்வித்தரம் உயரும் என்று
நம் பிரதமர்கள் சொன்ன
பொய்யை விடவும்,
உன் பொய் ஆயிரம் மடங்கு
தேவலாம் அப்பா..

பொய் வண்ணம்...25.. காத்திருப்பு....

அவர்கள் காத்திருக்கிறார்கள் நமக்காக
நாம் என்ன செய்யப்போகிறோம்?
கருப்பு இருட்டை கிழித்துக் கொண்டு
மானுடத்தை தட்டியெழுப்ப
சூரியக்கதிர்களாய்.

அறியாமை மயக்கத்தில் கிடக்கும்
உடலையும் உணர்வையும்
ஒலியெழுப்பி,நம்மை எழுப்ப
சேவல்களாய்..

முடை நாற்றமெடுக்கும்
மூட நம்பிக்கைகளால்
உணர்வு இழந்த நாசிகளுக்கு
புத்துணர்வு ஊட்ட
காலை மகரந்தங்களாய்..

பழமை வாதங்களைக் கேட்டு கேட்டு
செவிடாகி போன காதுகளுக்குள்
புதுராகம் பாட
சோலைக்குயில்களாய்..

இத்தனைக்கும் கேளாத காதாய்
பேசாத வாயாய்
இமைக்காத விழியாய் இருக்கிற
ஜனங்களை தட்டி எழுப்ப
கோவில் மணியாய்
தேவாரமாய்
அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்காக..

நாம் என்ன
செய்யப்போகிறோம்
அவர்களுக்காக??

பொய் வண்ணம்...24...நான்..

வல்லூறுகளுடன் வட்டமிட
நினைப்பவன் நான்..
வான்கோழிகள் நட்பு
தேவை இல்லை எனக்கு..

நெடிதுயர்ந்து மேகத்தை
பிளப்பவன் நான்
ஈரத் தரை பாசியின்
தோழமை எனக்கெதற்கு?

அகண்ட பிரபஞ்சத்தை
வளைத்து பிடிப்பேன் என் விரல்களால்.
கரையோரத்து நாணல் அல்ல நான்.
கூண்டுக்கிளி என்றா நினைத்தீர்கள் ?
நான் பறந்து திரியும் வானம்பாடி
சின்ன சிறைக்குள்ளே அடைத்து
வேடிக்கை பார்க்க நினைக்காதீர்
என்னை.

நான் காற்று
எங்கும் எப்படியும் புகுந்து
வியாபித்திருப்பேன்
நான் தென்றல்
என்னை தீண்டாத வரை ...
புறப்பட்டால் புயல்
அந்தி மாலை சூரிய ரேகையும் நானே
ஆலமர கிளையும் நானே
நானே நான்
நான் தான்
நான்...

பொய் வண்ணம்...23... ஏழையின் விண்ணப்பம்..

என்ன கேட்கலாம்
இப்புத்தாண்டில் அவனிடம்?
முட மூட குறைப்பிரசவங்களை
ப்ரசிவிப்பதை விட்டு
இரட்டை நாக்கு,
இரும்பு இதய ஆடைகள் இல்லாத
முழு நிர்வாணங்களை மட்டுமே
படைக்கும் படி கேட்கலாமா?

கருவை சுமக்கும் கன்னியையும்
அந்த கன்னி சுமக்கும் கருவையும்
கலைத்துவிட கேட்போமா- இல்லை
அந்த காமுகனை கழுவிலேற்றி
கொன்றுவிட கேட்போமா?

வாழ்க்கைக்கு உதவாத
வாதங்கள் புரிபவன் வாயை
கட்டி விட கேட்போமா இல்லை
அவன் மூளி எழுத்துக்களை
முடமாக்கி விட
கோரிக்கை விடலாமா ?

ஒருவேளை சோறிட இயலாத
கல்வியை மறுப்போமா?
இல்லை அதை போதிப்பவனுக்கே
வாழ்க்கை கல்வியை
கொஞ்சம் நாமே சொல்லலாமா?

வரதட்சணை தீயை வளர்ப்பவனை
வதம் செய்யச் சொல்லலாமா ?
இல்லை அவனை மணக்க
நாமே இனிமேல் தட்சணை கேட்கலாமா?

அரிசன சகோதரன் நுழையா கோவிலை
தகர்க்கத் சொல்லலாமா?
இல்லை தரிசனம் மறுக்கும்
ஆண்டவனையே
கொஞ்சம் தள்ளி விடலாமா?

இக்கொடுமைகள் இல்லா
புதிய சமுதாயத்தை படைக்க
சொல்லலாமா?
இல்லையேல் படைப்பதயே
கொஞ்சம்
நிறுத்த சொல்லலாமா

பொய் வண்ணம்..22.... புதிய பாடத்திட்டம்......


நானும் கேட்டுக் கேட்டு சலித்து விட்டேன் தோழா
அவன் ஒன்றும் வழிகாட்டுவதாக காணோம்
இம்முறை நாமே ஒரு முடிவு செய்யலாமா?

நல்வழி காட்டுகிற பாதையையை மட்டும் விட்டுவிட்டு
மற்றவற்றை தகர்த்து விடலாமா ?

சத்தியம் பேசுகிற நாவை மட்டும்  பேச விட்டு
மற்றவற்றை அறுத்துவிடலாமா?

கொடுக்கிற கையை கொடுக்கச் சொல்லி
எடுக்குற கையை என்ன செய்யலாம்?
பொசுக்கலாம்.
வேறு என்னதான் செய்யலாம்?

ஆனாலும்
ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டுமே
இந்த தேசம் உருப்பட
வருங்கால சந்ததி வாய்மூடி
மௌனியாக இருக்க வேண்டி
ஏற்றத்தாழ்வுகளை ஏடுகளில் நுழைத்து
மகாத்மா எந்த மதத்தை சேர்ந்தவர்
பாரதி எந்த சாதி என்ற கேள்வி பதில்
நம் சந்ததியின் பாடப்புத்தகத்தில் வருமுன்
ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டுமே..
இந்த தேசம் உருப்பட..
என்ன செய்யலாம்??

பொய் வண்ணம்..21... அமர்நாத் அரிச்சுவடி..

உடைந்த ஒட்டடைக்குச்சியில் இருந்து
மீண்டு ஓடியது சிலந்தி
வலை பின்ன
வேறு உயிர் பறித்து
தன் உயிர் காக்க

மரத்தடி ஜோதிடனின் நெல்லுக்காய்
சீட்டு எடுத்து மீண்டும்
கம்பிச்சிறைக்குள் போனது
சிறகு இருந்தும்
பறக்க நினைக்காத பச்சைக்கிளி ...

பனிலிங்கம் பார்க்கச் சென்ற
சிவனடியார் உயிரை
பாமர முஸ்லிம் சகோதரன்
மீட்டுத் தந்தான்..

நிற்பதுவும்
நின்று ஜெயிப்பதுவும்
வாழ்க்கை என்றாகிவிட்டபின்
இந்து என்ன
முஸ்லிம் என்ன?
சிலந்திக்கும் சிவனடியார்க்கும்
வேறுபாடுதான் என்ன?
இன்று ஜெயித்தது என்னவோ
மானிடம்தான்..

பொய் வண்ணம்..20.... காணவில்லை.....

பஞ்சாபில்
சீக்கிய தீவிரவாதிகளின்
துப்பாக்கி தாக்குதலுக்குப்
பயந்து ஓடியதை
பார்த்தவர்கள் சொன்னார்கள்..

உத்தர பிரதேசத்திலும்
பீகாரிலும் தலித்துகளோடு
சேர்ந்து இருக்கையில்
மேல் சாதிக்காரன்
அடித்து விரட்டுவதாக
அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்...

அசாம் காடுகளில்
அனாதையாய் திரிகிறதோ
இமயமலைச் சாரலில்
கிடந்து உறங்குகிறதோ?
என்ன ஆயிற்று
எங்கே போயிற்று??

ஆந்திராவில் நக்சல்பாரிகளாலும்
குஜராத்தில் கடத்தல்காரர்களாலும்
கடத்தப்பட்டதாக
பலரும் சொன்னார்கள்..

எனக்கு ஒரு சந்தேகம்
எங்காவது தென்மாவட்ட
சாதிக் கலவரங்களில்
கொன்று போட்டு விட்டுப்
போய் விட்டார்களோ அந்த கயவர்கள்?
யாராவது கொஞ்சம் கண்டுபிடித்து
கொடுங்களேன்
காணாமல்போன
எங்கள் சுதந்திரத்தை..

பொய் வண்ணம்...19 ....தொலைந்த முகம்......

நவரசங்களையும் உள்ளடக்கி
அஷ்ட கோணலாய்
கொஞ்சம் தூக்கலாய்
இதுதான் அது என்று தெரியாதபடி இருக்கும்
அதுதான் ஐயா ஒரே அடையாளம்..

மனைவியிடம் ஒருமுகமாய்
மகனிடத்தில் மறுமுகமாய்
அதிகாரி இடத்தில் மறைத்த முகமாய்
அரசியல்வாதியிடமும் எதையோ இழந்த முகமாய்
யாரிடமும் ஒரே முகமாய் இல்லாமல்
தினம் தினம்
நொடிக்கு நொடி
வேஷம் போட்டு
கிழிந்து தொங்கிய படி
உருத்தெரியாமல் இருக்கும்
என் உண்மை முகத்தை
யாராவது பார்த்தீர்களா??

பொய் வண்ணம்....18... புத்தாண்டு 96....

என்ன வேண்டும் உனக்கு
இந்த புத்தாண்டில்
என்னிடமிருந்து
இறைவன் ஒருநாள் கனவில் கேட்டான்...
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடின
அந்த வள்ளலாரை தருவாயா என்றேன் ..
மாண்டவர் மீள்வதில்லை மானிடனே என்றான்..

 இந்தியாவை ஒற்றுமைப்படுத்திய
அந்த இரும்பு மனிதன்? என்றேன்
சாதி சமய வேறுபட்டால் பிளவுற்ற
உன் தேசத்தை ஒன்று படுத்த முடியாது என்றான்

 யோசித்த நான் தெளிவாய் கேட்டேன்
இந்த தேசத்தை விடுவிக்க
எங்கள் தேசத்தந்தையை உன்னால் தர முடியாது
அவனது கைத் தடிக்காவது உயிர் தா என்றேன்.
கனவு கலைந்தது
இறைவனை காணவில்லை

பொய் வண்ணம்..17... காலண்டர்....

பால் கணக்கு
 மோர் கணக்கு
வேலைக்காரி சம்பள கணக்கு
வேறு பல கணக்குகள் என் மனைவிக்கு...

 எப்போதெல்லாம் லீவு
என்கிற கணக்கும்
கிரிக்கெட் மேட்ச் கணக்கும்
 மகனுக்கு...

அஷ்டமி நவமி
திதி ,திருவாதிரை
 பிள்ளையாருக்கு எப்பொழுதெல்லாம்
பூஜை செய்ய
 தாயின் தவிப்பு கணக்கு..

எல்லா கணக்கையும் சரியாய் போடும்
பாழாய்ப்போன காலண்டர்
 என் சம்பளத்தை மட்டும்
மாதம் ஒரு முறை மட்டும்
போடுவது என்ன?

பொய் வண்ணம்..16.. எதிரிகளே...

என் அன்பு எதிரிகளே
நான் உங்களை இன்னமும்
இப்போதும் நேசிக்கிறேன்...

என்னை ஆழ்கடலில் தள்ளி
அமிழ்த்த பார்த்தீர்கள்
நான் நீந்த கற்றுக் கொண்டேன்..
மீண்டு வந்து கரை தொட்டபோது
 தலை மேல் கால் வைத்து
அழுத்தி தள்ளினீர்கள் கடலுக்குள்
 மூச்சடக்க கற்றுக்கொண்டேன்..

மூழ்கித் தத்தளித்த போது
அட்டகாசமாக சிரித்தீர்கள்
 நான் மூழ்கினேன்
ஆனால் சாவதற்கல்ல எதிரிகளே
முத்தெடுக்க..

என் கூரைக்கு தீ வைத்தீர்கள்
நான் புடம் போடப்பட்டேன்.
 எரிந்தது
என ஏளனம் செய்தீர்கள்
எரிந்தது நானல்ல எதிரிகளே
உங்களின் உளுத்துப்போன
எண்ணங்கள்தான்..

 சிலுவையில் அறைந்தார்கள்
ஒரு ஆணி சேர்த்து அடித்தீர்கள்
ஆனால் எதிரிகளே
அந்த ஆணிகள் தான்
 என் வாழ்க்கை தேரின் அச்சாணிகள்.

 என் பிரிய எதிரிகளே
நான் உங்களை இன்னும் நேசிக்கிறேன்
நான் இப்போது
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்
 ஓடிவிட மாட்டேன்
ஜெயிப்பேன் நிச்சயம்
உங்களுக்காகவாவது.. 

பொய் வண்ணம்..15... தங்கச்சாமி...


அன்புத்தோழா தங்கச்சாமி
அந்நாளில் உன் முன்னோர்கள்
ஆற்றில் துணி வெளுத்தார்கள்
 என் முன்னோர்கள்
கரையில் யாகம் வளர்த்தார்கள்..

பின்னாளில் வீட்டினுள்ளே
சவுகரியமாக நல்ல தண்ணியில் போட்டு
அடித்து துவைத்தார்கள்.
 துணியும் வெள்ளை ஆச்சு
என்ன சீக்கிரம் கொஞ்சம் கிழிஞ்சு போச்சு..
என்னோர்கள் காஞ்சியை தரிசித்தார்கள்
பாரதியைப் படித்தார்கள்
 மனசு வெள்ளை ஆச்சு..

இப்போதெல்லாம்
நீ இயந்திரத்தில் துணி வெளுக்கிறாய்
அதிர்ஷ்டக்காரன்
துணி இன்னமும் வெள்ளையாய்..
எங்கள் மனசோ கருப்பாய்
வெடிகுண்டு புகையாய்
மனசு வெளுக்க
இதயம் சிறக்க
இயந்திரம் உண்டா
உன்னிடம்
தங்கச்சாமி

பொய் வண்ணம்..14.....ஜனவரி 30....

பரமண்டலத்தில் இருக்கும் எங்கள்
முருகப்பெருமானே
 ஏழைகளை ரட்சித்து
அவர்களை காப்பாற்றுவாயாக
ஆமென்...
டேய் யார்ரா அது காலங்காத்தால கத்தறது??

எதிர்வரும் பிப்ரவரி முதல் நாள்
எங்கள் மகன் ராமசாமிக்கும்
இன்னாசி மகள் சகாயமேரிக்கும்
நிக்காஹ் நடைபெற உள்ளது
அனைவரும் வந்திருந்து
என்னை கவரவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
டேய் சொல்லிட்டே இருக்கேன் இல்ல.. காதல ஏறலையா??

தேவதூதர்களே
எங்கள் அரிஜன காலனிகள் மீது
பன்னீர் தெளியுங்கள்
பூ தூவுங்கள்
 செல்வ ஒளி வீசுங்கள்
அவர்கள் தேவனின் குழந்தைகள்..
டேய் அந்த பைத்தியக்காரன
அடிச்சு தொரத்துங்கடா..
மீட்டிங் போற நேரத்தில ஒரே எழவா போச்சு..

 இன்றைய தலைப்புச் செய்திகள்.
 இன்று ஜனவரி 30.
 தேசப்பிதா வின் நினைவுநாள்.
 நாடெங்கிலும்
மதநல்லிணக்க பேரணிகளும்
 சமபந்தி போஜனமும் நடைபெற்றது.
 தேசத் தலைவர்கள் கலந்துகொண்டு
 சர்வமத நல்லுறவை
வலியுறுத்திப் பேசினார்கள்